தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், அதிமுக தலைவர்களை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த விவகாரத்தில், அவரது கருத்து கட்சியினுடையது ஆகாது என்று விளக்கம் அளித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன், பாஜக எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருவதாகவும், அதிமுகவில் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேசக்கூடிய ஒருவர் கூட இல்லை என கூறினார்.

அதிமுகவில் ஆண்மையுடன் பேசக்கூடிய ஒருவர் கூட இல்லை என பாஜகவின் நாயனார் நாகேந்திரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு பாஜகவில் இணைந்து அதிமுக ஆதரவின் மூலம் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன், தற்போது ஜெயித்த பின் அதிமுகவினருக்கு ஆண்மை இருக்கின்றதா என கேட்பது எவ்வகையான மனநிலை என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்துப் போட்டியிட்டு தனது ஆண்மையை நிரூபிப்பாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் #நைனார்_மன்னிப்புகேள் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. மேலும் பாஜக அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டுமெனவும் தொண்டர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை பதில் கூறாத நிலையில், இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவிட்டதாகவும் நயினார் நாகேந்திரன் பேசியபோது ஒரு வார்த்தை தவறாக வந்துவிட்டதாகவும் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து கட்சியினுடையது ஆகாது. இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளேன். அதிமுக தலைவர்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்தேன்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாஜக இக்கட்டான நேரங்களில் இருந்தபோது அதிமுக உதவியது. அதிமுக, பாஜக இடையிலான அரசியல் உறவு சமூகமாக உள்ளது. அந்த உறவில் எவ்வித பதற்றமும் ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.