அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்கள், பிரதிநிதிகளை இணைத்து அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு (All India Social Justice Federation) உருவாக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, திமுகவின் சார்பில் “சமூக நீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்” என்ற பெயரில் தேசிய அளவிலான இணைய கருத்தரங்கு நடைபெற்றது.

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் இணைய வழியில் ஒருங்கிணைத்த இந்தக் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். பிஹார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த முகமது பஷீர்,

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மனோஜ் குமார் ஜா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், ஆந்திர கல்வித் துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ், மகாராஷ்டிர உணவுத் துறை அமைச்சர் சகன் புஜ்பால் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்று பேசினர்.

இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா பேசும்போது, “திராவிட இயக்கம் தங்களுக்கு மிகப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சமூகநீதிக்காக தாங்கள் குரல் எழுப்பும்போதெல்லாம் திமுக தான் மிகப் பெரிய அளவில் ஆதரவை வழங்கியது” என்று குறிப்பிட்டார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன் பேசுகையில், “நீங்கள் செய்திருப்பது சாதாரணமான, எளிய பணி அல்ல. நாம் தொடர்ந்து இத்தகைய பணிகளை இணைந்து மேற்கொள்வோம்” என்றார் .

பிஹார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசும்போது, “நீதிமன்றத்தில் ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் நியாயத்தைப் பெற்றுத் தந்துள்ள ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் எங்களது நன்றிகள். ஆனால் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தான் மிக முக்கியம்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கோருவதால் நாங்கள் சாதியவாதிகள் என்று நினைக்கவேண்டாம். நாங்கள் சமத்துவவாதிகள். மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் பயன் நமக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் சாலைக்கு வந்து போராட வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “சமூக நீதிக்கான பாதை என்பது ஒரு நாளில் போடப்பட்டதல்ல. டாக்டர் நடேசனார், டி.எம். நாயர், சர். பிட்டி தியாகராயர், ஏ.டி. பன்னீர்செல்வம், பனகல் அரசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களால் பல தசாப்தங்களாக, ஒவ்வொரு கல்லாக வியர்வையும் ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டது.

இந்திய அளவில் ஜோதிராவ் பூலே, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், வி.பி. சிங் போன்ற தலைவர்கள் இதற்காகப் போராடினர். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான பாதையில் நாம் தொடர்ந்து செல்ல இந்தியா முழுவதும் சமூக நீதியை செயல்படுத்த வேண்டும்.

இந்நிலையில் தான், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகளைக் கொண்டு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை மாறலாம்.

ஆனால், சமூக நீதிக்கான தேவை என்பது ஒன்று தான். எல்லோருக்குமான வளர்ச்சி என்பதை உள்ளடக்கி இந்த முயற்சியை விரைவிலேயே துவங்குவோம். இட ஒதுக்கீடு என்பது நமது உரிமை என முழங்குவோம்” என்று குறிப்பிட்டார்.