முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த பட்டியலை ஆர்டிஐ மூலம் வெளியட பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தது தொடர்பாக தற்போது ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலுக்கு , பிரதமர் அலுவலகத்துக்கு மற்றும் நிதியமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பி உள்ளது

வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களின் பட்டியல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தது குறித்து விளக்கம் கேட்டு ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வங்கிகளில் ரூ.50 கோடிக்கும் மேலாக கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோதிலும், அந்த தகவலை மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதனை வெளியிடவில்லை.முன்னதாக, ரகுராம் ராஜன் அளித்த பட்டியலை ஆர்டிஐ மூலம் வெளியட பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஆர்பிஐ கவர்னருக்கு சிஐசி அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவித்துள்ளதாவது,

“ஆர்டிஐ கொள்கையின் படி ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுவதற்கும், ஆர்பிஐ கவர்னர் மற்றும் துணை கவர்னர் கூறுவதற்கும் ஒரு பொருத்தம் கூட இல்லாதது போல் சிஐசி உணர்கிறது. கண்காணிப்பு மற்றும் ஆய்வு அறிக்கைகள் ரகசியமாக வைக்கப்படுகிறது. ஜெயந்திலால் வழக்கில் சிஐசி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தபிறகும், அதனை செயல்படுத்தவில்லை.

எனினும், அந்த பட்டியலை வெளியிடாமல் இருந்ததற்கு கவர்னரையே பொறுப்பு தகவல் ஆணையராக சிஐசி கருத்தில் கொள்கிறது. அதனால், நவம்பர் 16,2018 முன் அவர் மீது ஏன் அதிகபட்ச அபராதம் விதிக்கக்கூடாது” என்று விளக்கம் கேட்டுள்ளது.

மேலும், வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பான முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அளித்த கடிதத்தையும் வெளியிடுமாறு ஆர்பிஐ, பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியமைச்சகத்தை சிஐசி தெரிவித்துள்ளது.