முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனாலும் மத்திய அரசு இவர்களை விடுதலை செய்வதில் தயக்கம் காட்டியது. இது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்னையில் அதிரடியாக ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதை தொடர்ந்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய சட்டப்பிரிவு 161ன் கீழ் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் மகிழும் வகையில் ஆளுநர் நிறைவேற்றி தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

7 தமிழர்களை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் முடிவை ஆளுனர் உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும், காலதாமதம் செய்யக் கூடாது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஆனால் 7 பேரை விடுதலை செய்வது, எதிர் காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசுக்கு சாதகமாகவே ஆளுநர் முடிவு எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

அமைச்சரவையில் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக தமிழக ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தாம் பார்க்க வேண்டும் என்று பாஜகவின் எம்பி , முக்கிய பிரமுகர் இல .கணேசன் தெரிவித்துள்ளார்.