சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க அவசரம் காட்டும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விவசாயத்தை அழிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். பின்னர், சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்ட அரசாணையை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடு செய்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இச்சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன் சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும் வாசிக்க: தோல்வியடைந்த ஊரடங்கு இப்படித்தான் இருக்கும்- ராகுல்காந்தி கடும் தாக்கு
இதனை கண்டித்து 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக ஒன்றிணைந்து விளைநிலங்களில் கோரிக்கை அட்டைகள் ஏந்தியும், கருப்புக்கொடி ஏந்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த 8 வழிச்சாலை விளைநிலங்களை அளித்தும், மரங்களை அளித்தும், வனங்களை அளித்தும் வரக்கூடிய இந்த சாலை வரக்கூடாது. நாங்கள் இந்த சாலையை அமைய விடமாட்டோம். விவசாய நிலங்களை ஒருபோதும் இந்த சாலைக்காக வீட்டுக் கொடுக்க மாட்டோம் என்ற வகையில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், விளைநிலங்களை அழிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இருப்பினும் மத்திய,மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விவசாயத்தை அழிக்க முடிவு செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
விளைநிலங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட்டு கொரோனா தடுப்பு பணியில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.