தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அறிவித்தார். அதன் விவரம்:
சூலூர் – பொங்கலூர் நா.பழனிசாமி
அரவக்குறிச்சி – வி.செந்தில்பாலாஜி
திருப்பரங்குன்றம் – டாக்டர் பி.சரவணன்
ஒட்டப்பிடாரம் (தனி) – எம்.சி.சண்முகையா
வேட்பாளர்கள் பற்றிய விவரம்: சூலூர் தொகுதியில் போட்டியிடும் பொங்கலூர் நா.பழனிசாமி திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.
அரவக்குறிச்சியில் போட்டியிடும் செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின்னர் அதிமுகவிலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு, அங்கிருந்து பிரிந்து சமீபத்தில்தான் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த உடனேயே போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு ஏ.கே.போஸிடம் தோல்வியுற்றார். ஆனால், ஏ.கே.போûஸ வேட்பாளராக அங்கீகரித்து வேட்புமனு படிவத்தில் ஜெயலலிதா வைத்த கைரேகை செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதில் சரவணன் வெற்றியும் பெற்றார். எனினும், தேர்தலில் வெற்றி பெற்றவராக உயர்நீதிமன்றம் அவரை அறிவிக்கவில்லை.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் எம்.சி.சண்முகையா வழக்குரைஞர். ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர். இரண்டு முறை ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்துள்ளார்.
அதிமுக தினகரன் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் குழம்பி கொண்டு இருக்கும் நிலையில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை முதலாவதாக அறிவித்து உள்ளது ஜெயலலிதா அரசியல் பாணியில் உள்ளது என அரசியல் நோக்கரகள் கருத்து தெரிவித்து உள்ளனர்