‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து 20வது நாள் யாத்திரையை தொடங்கினார்.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே ராகுல் காந்தி தொடங்கினார். இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து துவக்கி வைத்தார்.

மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அவருடன் காஷ்மீர் வரை 118 பேர் செல்கின்றனர்.

கடந்த 7 முதல் 10 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 54 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த 11 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

சுமார் 18 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல், இன்று கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் மலப்புரத்தில் இருந்து 20-ஆம் நாள் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கினார். அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் ராகுலுடன் ஆர்வமாக இணைந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கேரள மாநிலம் கொப்பத்தில் நேற்று (26.09.2022) மாலை திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ஒன்றிய பாஜக அரசு ஒரு சில பணக்கார தொழில் அதிபர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. அதே நேரத்தில் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பிறரிடம் அதே அக்கறை காட்டப்படவில்லை.

எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் போதோ, வாகனங்களில் எரிபொருள் நிரப்பும் போதோ, கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அந்த பணம் மறைவதில்லை, நாட்டின் ஐந்தாறு பணக்கார தொழிலதிபர்களின் பாக்கெட்டுகளுக்கு அது போகிறது. இந்த அநியாயத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்” தெரிவித்தார்.