உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை 2வது நாளை எட்டியுள்ள நிலையில், தலைநகர் கீவில் வெடுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. மேலும் செர்னோபில் அணு உலை தளத்தையும் கைப்பற்றியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் நடைபெற்று வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனையடுத்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதன் நீட்சிதான் இப்போது ஏற்பட்டுள்ள மோதல்.
கடந்த நவம்பர் மாதம் தொடங்கி பல வாரங்களாகவே பதற்றம் நிறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது தாக்குதல் தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. இந்திய நேரப்பட்டி நேற்று (24.2.2022) காலை 8.30 மணியளவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.
போர் என்று பிரகடனப்படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக வார்த்தைகளைக் கையாண்டு ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுவதாகப் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடுகிறேன். இதன் நோக்கம், கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைன் ஆட்சியாளர்களால் சில மக்கள் இன அழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் துயரத்துக்கு முடிவு காண தாக்குதலுக்கு உத்தரவிடுகிறேன்.
உக்ரைனில் இருந்து நேட்டோ ஆதாரவுப் படைகள் பின்வாங்க வேண்டும். உக்ரைன் நாஜிக்களின் கூடாரமாகியுள்ளது. உக்ரைன் வீரர்களே உங்களின் ஆயுதங்களை கீழே போடுங்கள். ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் யாராவது தலையிட நினைத்தாலோ, எங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறினாலோ, நாங்கள் உடனடியாக தகுந்த பதிலடி கொடுப்போம். அதன் விளைவுகள் வரலாறு இதுவரை சந்தித்திராததாக இருக்கும்.
உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் அல்ல. நாங்கள் உக்ரைனை ஆக்கிரமிக்க மாட்டோம். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார். ரஷ்ய அதிபரின் எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட அதன் சார்பு நாடுகளும், நேட்டோ படைகளும் மிகவும் கூர்ந்து கவனித்து வருகின்றன.
இதனைத்தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்திவரும் நிலையில், 2வது நாளான இன்று (25.2.2022) தலைநகர் கீவைக் குறிவைத்துள்ளது. தலைநகர் கீவ் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இதனை உக்ரைன் அரசும் உறுதி செய்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து 65 மைல் தொலைவில் உள்ள பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் செர்னோபில் அணு உலை இயங்கிவந்தது. 1970-களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்த அணு உலையில் நான்கு உலைகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 1,000 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
1986 ஏப்ரல் 25-ல், நான்காம் எண் உலையில் ஏற்பட்ட விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் நடந்த இந்த பெரும் விபத்து தான் உலக நாடுகளில் பலரும் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை இன்றளவும் முன்னெடுக்கக் காரணமாக இருக்கிறது. 2000-ல், செர்னோபிலின் கடைசி உலை மூடப்பட்டது.
இந்நிலையில் செர்னோபில் உள்ள அணு உலை பாதுகாப்பு ஊழியர்களை ரஷ்யா சிறைப்பிடித்துள்ளது. ரஷ்ய படைகள் வீசிய குண்டு ஒன்று செர்னோபில் அணுக்கழிவில் விழுந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்துள்ளது.
இப்போது போரில் செர்னோபில் அணுக் கழிவுகளால் எந்த ஆபத்தும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று உலகமே அச்சத்தில் உள்ளது. அதனாலேயே அங்கிருந்து ரஷ்யப் படைகள் விலக வேண்டும். அணு உலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.
மேலும், செர்னோபிலில் இருந்து தலைநகர் கீவ் வெகு அருகில் இருக்கிறது என்பதால் ரஷ்யா இன்றைக்குள் கீவ் நகரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இதனால் தலைநகர் கீவில் உள்ள மக்கள் ரயில்கள், கார்கள் மூலம் வெளியேறி வருகின்றனர்.
அதேபோல் உக்ரைனின் வடகிழக்கு எல்லையில் உள்ள ஜேப்போரிஸியா பகுதியைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பகுதி அஸோவ் கடற்கரையை ஒட்டியுள்ளது.
நிலம், கடல், வான்வழி என அனைத்து வகைகளிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்ய படைகள் முன்னேறும் வேகத்தைப் பார்க்கும்போது, உலக அளவில் பெரும் பதற்றமும் கவலையும் அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் வலுத்துள்ள நிலையில், “மிகப்பெரியளவில் உயிரிழப்பு ஏற்படும். இதற்கு புதினே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் போர் ஜான்சன், “ரஷ்ய அதிபர் ரத்தப் பாதையை, அழிவுப் பாதையை தேர்வு செய்துள்ளார். பிரிட்டன் தகுந்த பதிலடி கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்ய அதிபர்கள் சந்திப்புக்கு முயன்று வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவே மேக்ரோன், “போரை முடிவுக்குக் கொண்டு வர பேசி வருகிறோம். உக்ரைனுக்கு தோள் கொடுப்போம்” என்று கூறியுள்ளார். இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி, “ரஷ்ய நடவடிக்கை எந்த வகையிலும் நியாயமானது இல்லை” என்று கூறியுள்ளார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, “ரஷ்ய செயல்பாடு சர்வதேச அமைதியைக் குலைக்கும்” என்று கூறியுள்ளார்.
இப்படி சில நாடுகள் தங்களின் கண்டனங்களை மேலோட்டமாக பதிவு செய்ய, மற்ற ஐரோப்பிய நாடுகள் மவுனம் காக்கின்றன. காரணம் ரஷ்யாவின் இயற்கை எரிவாயு தயாரிப்புச் சந்தையை ஐரோப்பிய நாடுகள் சார்ந்துள்ளன. இந்நாடுகளின் 65% எரிவாயு தேவை ரஷ்யா தான் குழாய் மூலம் பூர்த்தி செய்கிறது. இதனாலேயே ஐரோப்பிய நாடுகள் பலவும் மவுனம் காப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ளது. வெளியுறவு இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறுகையில், “உக்ரைன் ரஷ்யா மோதல் விவகாரத்தை இந்தியா நடுநிலைமையாகவே அணுகுகிறது. பெரிய நன்மைகளுக்காக இரண்டு நாடுகளும் அமைதியை நாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.