பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின்படி ரூ.258 கோடி செலவில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை தொகுப்பு பையில் போட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 1.98 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது.
ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவரும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும். நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம்.
அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது.
மேலும், தமிழக அரசுக்கு வரி உள்ளிட்ட பிற வகைகளில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி வருமானம் கிடைக்கிறது. ஆனால், செலவு உள்ளிட்டவை ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடியாக உள்ளது.
இதுபோக தமிழக அரசு ரூ.43 ஆயிரம் 962 கோடி கடன் வாங்கியுள்ளது. எனவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்க தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்க கூடாது என்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கொடுப்பதேன் ?
எந்த நோக்கத்திற்காக பணக்காரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனிடையே அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த நீதிபதிகள், ‘அரசின் கொள்கை முடிவு தவறாக இருந்தால் நீதிமன்றங்கள் தலையிடும்
கட்சிப்பணம் என்றால் கேட்கமாட்டோம் அரசின் பணம் என்பதால் கேள்வி கேட்கிறோம் அரசு நிதி என்றால் கேள்வி எழத்தான் செய்யும்.
பணமாக அளிப்பதற்கு பதிலாக தரமான சாலை, மருத்துவம் வழங்கலாமே என்று கூறினர்.
இதையடுத்து பொங்கல் பொருட்கள் மட்டுமே வழங்கிய நிலையில் ரொக்கம் சேர்க்கப்பட்டது ஏன் ?
தேர்தல் அறிக்கையிலும் அப்படி ஏதும் அறிவித்ததாக இல்லையே ? என்ற கேள்விகளை எழுப்பிய நிலையில் தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத்துறை ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவால் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி ரூ.1000 கிடைக்காது.
மேலும் முன்னுரிமை பெறாத NPHH, NPHHS ஆகிய ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 ரொக்க பணம் கிடைக்காது.