தமிழக அரசு 10 வகையான தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசும் ஊரடங்கில் சில கடைகளுக்கு தளர்வு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629ஆக உயர்ந்துள்ளது. மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீடித்த ஊரடங்கில், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் சில பகுதிகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்திருந்தது. எனினும், தமிழகத்தில் தளர்வுகள் இல்லை எனவும் ஊரடங்கு தொடரும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் சில தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆராய நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 10 வகையான தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, சுத்திகரிப்பு நிலையங்கள், சிமெண்ட் ஆலைகள், டி.எம்.டி.பார் தயாரிப்பு உள்ளிட்ட எஃகு தொழிற்சாலைகள், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு ஆலைகள், உரத்தொழிற்சாலைகள், கண்ணாடி, டயர், மற்றும் பேப்பர் ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என அறிவித்துள்ளது. இயந்திரங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளில் குறைந்த பணியாளர்களை கொண்டு அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: கொரோனா அதிகரிப்பால் சென்னையில் மூடப்படும் முக்கிய சாலைகள்
முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் மேற்கொள்ளப்பட்ட தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், கொரோனா பாதிப்பு குறைவாகக் காணப்படும் மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர்ப்புறங்களிலும் மொபையில் ரீசார்ஜ் கடைகள், மின்விசிறி சர்வீஸ் கடைகள், மாணவர்களுக்கான நோட்டுகள், புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.