ஹலோ எப்.எம். சார்பில் அதிகம் பேசப்பட்ட பிரபலம் பட்டியலில் முதலிடம் பிடித்த மு.க.ஸ்டாலினுக்கு ஹலோ தமிழா விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
 
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ஹலோ எப்.எம். சார்பில் அதன் ஆக்க தலைமையாளர் எஸ்.கே.ரமேஷ் ஹலோ தமிழா விருதை வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
 
‘தினத்தந்தி’ ஊடகக்குடும்பத்தின் வானொலியாக 2006-ல் உருவெடுத்து, தற் பொழுது சென்னை உள்பட தமிழகத்தின் ஒன்பது முக்கிய நகரங்கள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் பத்து நகரங்களில் வரும் ஹலோ எப்.எம். பண்பலையின் சார்பில், வார நாட்களில் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை, ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.
 
 
‘ஹலோ எப்.எம்.’ கடந்த பத்து ஆண்டுகளாக, ஒவ்வொரு வருட இறுதியிலும், ஹலோ எப்.எம். சார்பில் ‘ஹலோ தமிழா’ நிகழ்ச்சியில் மட்டுமல்ல, அனைத்து தமிழ் ஊடகங்களிலும், அந்த ஆண்டு முழுவதும் அதிகம் பேசப்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, மேலும் தமிழர் மனங்களை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்த ஒரு முக்கிய நபருக்கு, ஹலோ தமிழா பட்டியலில் முதலிடம் என கவுரவித்து, வெற்றி மகுடம் சூட்டி, விருது வழங்கி வருகிறது.
 
இதன்படி இந்த ஆண்டு அந்த பெருமையும், விருதும், அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் ஹலோ எப்.எம். சார்பில், அதிகம் பேசப்பட்ட பிரபலம் என்ற வகையில் ‘ஹலோ தமிழா விருதுக்கு’ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வானார். இதைத்தொடர்ந்து அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.