விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 12வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அவர்களை நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்
அப்போது அவர் இதுவரை அரசு தரப்பில் இருந்து ஒருவர்கூட பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர் எனவும் தமிழக அரசு விவசாயிகளை எவ்வளவு தான் அலட்சியப்படுத்தினாலும், வருகிற சட்டமன்றக் கூட்டத்தில் தி.மு.கழகம் இவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் என்கிற உறுதியை, நம்பிக்கையை அவர்களிடத்தில் தெரிவித்தேன் எனவும் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்
 
இந்நிலையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 6 பேர் மயக்கமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து திருப்பூருக்கு மின்சாரத்தைக் கொண்டு வந்து அங்கிருந்து தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மின்சாரத்தை பிரித்து வழங்க மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
இதற்காக திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாய விளை நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
மேலும் தமிழக அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, 13 மாவட்ட விவசாயிகள் ஈரோட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
12வது நாளாக போரட்டம் நடத்தும் விவசாயிகள் 6வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைத்தால் தங்களில் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் சாலை வழியாக கேபிள் அமைத்து இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 6 பேர் மயக்கமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்துவோருக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வருவதை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.