வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக , காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், வக்கீல் மனோஜ் பாண்டியன், தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பிரிவு இரா. கிரிராஜன், நீலகண்டன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், தனிகாசலம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஆறுமுகநயினார், ராஜசேகரன், தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், பாலசுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாரதிதாசன், கே.எஸ். மோகன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சாரதி மற்றும் அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி, பூத் முகவர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, வரும் ஜன.1-ஆம் தேதியுடன் 18-வயது நிறைவடைவோர் தங்களது பெயர்களை சேர்க்க வசதியாக வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் செப். 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.
சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14-ஆம் தேதிகளில் நடைபெறும். பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சுமார் ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்