வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை சேர்த்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்துள்ள ஊழல் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.சி.வீரமணிக்கு சொந்தமான சென்னையில் உள்ள இடங்களிலும், திருவண்ணாமலையின் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீடுகளிலும், பெங்களூரில் இருக்கும் அவருக்கு சொந்தமான பங்களா மற்றும் அலுவலகங்களிலும் சுமார் 300க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இவருக்கு எதிராக லஞ்ச தடுப்பு சட்டம் 1998ன் கீழ் 13 (2) மற்றும் 13(1) (இ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு, லஞ்ச தடுப்பு சட்டம் 1998ன் கீழ் 13 (2) மற்றும் 13(1) (பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு மற்றும் திருத்தப்பட்ட லஞ்ச தடுப்பு சட்டம் 2018ல் 07 என 3 சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கே.சி.வீரமணி அமைச்சராக இருந்த கடந்த 10 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்கள் சேர்த்ததாக வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வீரமணி மீது அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில், கடந்த 10 ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு 7 கோடி ரூபாயில் இருந்து 76.65 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 2011 முதல் 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட அதாவது 10 வருடங்களில், வீரமணிக்கு பல இடங்களில் இருந்து சொத்து சேர்ந்து உள்ளது.
43,06,27,147 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களையும், ரூ.15,74,35,980 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களையும் வாங்கி உள்ளதாகவும், இதற்கான வருமான கணக்கு காட்டப்படடவில்லை என்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்ததை பயன்படுத்தி சொத்துக்களின் மதிப்பை குறைத்து காட்டி பத்திரப் பதிவு செய்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.