மத்தியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு வைபவம் முடிந்துவிட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க சார்பில் வென்ற ஒரே ஒரு எம்.பியான ரவீந்திரநாத்துக்குக் கேபினட்டில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால் கட்சியில் இளையவரான ரவிக்குக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுப்பதென்றால் ராஜ்யசபா எம்.பியான வைத்திலிங்கத்துக்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்’ என எடப்பாடி கோஸ்டி அதிரடி காட்டியது.
இந்தக் கோரிக்கையை பா.ஜ.க தலைமை ஏற்கவில்லை. அமைச்சர் பதவி நம்பிக்கை பொய்த்துப் போனதில் கடும் வருத்தத்தில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.
இதன் எதிரொலியாக அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக பேச தொடங்கியது அதிமுக வினரை மட்டுல்லாது இரு தலைமையை அதிமுகவில் மலர செய்த பாஜகவையும் அதிர வைத்துள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ, ராஜன் செல்லாப்பாவின் கோரிக்கைக்கு அதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
’’அதிமுகவுக்கு ஒரே தலைமைத் தேவை. இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவர் தலைமையில் கட்டுப்பாட்டுடன் கட்சியையும் ஆட்சியையும் கொண்டுசெல்ல வேண்டும்.
பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும்.
தினகரன் என்ற மாயை முடிந்துவிட்டது. இரட்டை தலைமை இருப்பதால் உடனுக்குடன் முடிவு எடுக்க முடியவில்லை என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்’’ என்று மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்திருந்தார்.
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இரண்டு தலைமை இருக்கும் நிலையில், ராஜன் செல்லப்பா கூறிய இந்த கருத்து திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக அதிமுக முன்னாள் எம்.பி, கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏவுமான, ஆர்.டி. ராமச்சந்திரனும் ராஜன் செல்லப்பா கருத்துக்கு இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘’ ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கருத்தை வரவேற்கிறேன். அதிமுகவில் குழப்பத்தை, உட்கட்சிப் பூசலை ஏற்படுத்த வேண்டும் என்று இதை சொல்லவில்லை. தொண்டர்களின் வருத்தத்தைதான் பதிவு செய்கிறேன். தர்மயுத்தம் நடத்திய ஓ. பன்னீர்செல்வம் தனது மகனுக்கு பதவி கேட்டதாக வரும் தகவல் வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்
மேலும் பேசிய அவர் அதிமுகவில் குடும்ப அரசியலை கொண்டு வருவது குறித்து தொண்டர்கள் கவலை படுகிறார்கள்.
பொதுக்குழுவில் இதுபற்றி அதிமுக நிர்வாகி கள் எடுத்துச் செல்ல உள்ளோம். அதிமுக அரசுக்கு ஒரு போதும் எம்எல்ஏக்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். அதிமுக கட்டுக்கோப்பாக இருக்கிறதா என்பதில் கேள்வி எழுந்துள்ளது உண்மை.
வெளிப்படையாக ஊடகத்தில் எம்எல்ஏக்கள் பேச வேண்டிய நிலையே கட்டுக்கோப்பின்மை தான். கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. ஆனால், தலைவர்களுக்குள் கருத்துவேறுபாடு இருப்பதாக உணர்கிறோம். இரட்டை தலைமையில் ஈகோ இருப்பதாக நினைக்கிறேன். அதனால் தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கேட்கிறோம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படி வெளிப்படையாக பேசுவது அதிமுக மேலும் உடைய வழிவகுத்து விடும் என்பதால் கட்சியின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் வெளியில் தெரிவிக்கக்கூடாது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஊடகங்களில் தெரிவிப்பது ஏற்கத்தக்கதாக இல்லை என தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதும் கூறிப்பிடதக்கது ..
ஆனால் இந்த கோரிக்கை பாஜக தங்களை அடிமைப்படுத்தி அவமானபடுத்துவதாக நினைக்கும் அதிமுகவின் தொண்டர்களை கட்டுப்படுத்துமா எனபதை இனி வரும் அரசியல் நிகழ்வுகள் தான் சொல்லும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்