சென்னை அண்ணாசாலை மற்றும் தாராபுரம் ஆகிய இடங்களில் உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்ட சம்பவம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெரியாரின் 140வது பிறந்த நாள் தமிழகத்தில் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெரியார் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி பெரியார் சிலை மீது வீசினார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காலணி வீசியவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமாவளவன் உள்ளிட்டோர் ஆர்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் ஜெகதீசன் என்ற வழக்கறிஞர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை தீவுதிடல் பூங்காவில் தந்தை பெரியாரின் 6 அடி உயர வெண்கலச்சிலை உள்ளது. இந்நிலையில் இன்று மர்மநபர்கள் பெரியார் சிலையின் தலைமீது ஒரு ஜோடி காலணிகளை வைத்து அவமரியாதை செய்தும் கல்லால் அடித்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியாரை இழிவுபடுத்தப்பட்ட தகவல் அறிந்ததும் திக, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவுதிடல் பெரியார் சிலைமுன் குவிந்தனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை தாம்பரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசுகையில்,மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தாலும் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீசன் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் , பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமிழிசை கூறியதை கேட்டு நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.