பெங்களூர் நகரில் இன்று பிற்பகல் திடீரென கேட்கப்பட்ட மர்மமான பயங்கர சத்தத்தால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
இன்று மதியம் பெங்களூரில் கே.ஆர்.புரம் துவங்கி இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, பொம்மனஹள்ளி, பேகூர், எலக்ட்ரானிக் சிட்டி என தொலைதூர பகுதிகளிலுள்ள மக்களும் ஒரே நேரத்தில் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர். குறிப்பாக கே.ஆர்.புரம் பகுதியில் தான் இந்த ஒலியின் அளவு மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சத்தம் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சத்தம் கேட்டதில்லை என்றும் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் சிலர் இதுபற்றி கூறுகையில், ஆம்பன் புயல் தெற்கு வங்க கடலில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்தபடி இருக்கிறது. மேற்கு வங்கத்தை அது நெருங்கிவிட்டது. எனவே பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்திய நிலப்பரப்பின் மேலே உள்ள வளிமண்டலத்தில் வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தின் காரணமாக வளிமண்டல வெடிப்பு ஏற்பட்டு, இதுபோன்று சத்தமாக எதிரொலித்து இருக்கும் என்று தெரிவித்திருந்தார்கள்.
மேலும் வாசிக்க: மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ஆம்பன்- பல மாவட்டங்களில் மின் இணைப்புகள் துண்டிப்பு
மற்றொருபுறம் மிராஜ் போன்ற போர் விமானங்கள் பறந்ததால் ஏற்பட்ட சத்தமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதை சோனிக் பூம் (sonic boom) என்று சொல்வார்கள். ஒலியின் வேகத்தை விட ஒரு பொருள் காற்றில் வேகமாக பயணித்தால் எழக்கூடிய ஒலி, சோனிக் பூம் என்று அழைக்கப்படும். சோனிக் பூம் பயங்கர ஒலி ஆற்றலை உருவாக்கும். இந்த சத்தம் இடி போன்ற ஒலியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூர் பாதுகாப்பு அமைச்சகம் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது. அதில், “இந்திய விமானப்படை வழக்கமாக மேற்கொள்ளும் விமான பயிற்சிகளின் போது ஏற்பட்ட சத்தம் தான் பெங்களூர் தெற்கு பகுதியில் உணரப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகள் நகரத்திற்கு வெளியே பாதுகாப்பான இடங்களிலேதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்ற சத்தம் விமானத்தை சூப்பர் சோனிக் வேகத்திலிருந்து, சப் சோனிக் வேகத்திற்கு மாற்றும்போது ஏற்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.