அதிமுகவை கடந்த வாரம் வரை கடுமையாக விமர்சனம் செய்த பாமக, வரும் மக்களவை தேர்தலில் திடீரென அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இதில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியை அரசியல் விமர்சகர்களும் பொதுமக்களும் மட்டுமின்றி பாமகவில் இருக்கும் சிலரே கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக பிரமுகர் ராஜேஷ்வரி அக்கட்சியில் இருந்து விலகி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று நடிகரும் பாமகவின் துணைத் தலைவருமான ரஞ்சித் பாமகவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 4 பேருக்கு கூஜா தூக்கிக் கொண்டு என்னால் வாழ இயலாது. நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இக்கட்சியில் சேர்ந்தேன். ஒரு நொடி பொழுதில் எனது கனவு தகர்ந்தது. 8 வழிச் சாலைக்காக நான் மக்களை சந்தித்தேன். அதில் வழக்கு போட்டார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எப்படி கூட்டணி அமைக்க முடிந்தது.
முதல்வரையும் மாறி மாறி மடையன், புறம்போக்கு, அடிமை, ஆண்மை அற்றவர்கள் என கடந்த வாரம் வரை பேசி விட்டு, எப்படி அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று நம்பி வந்த இளைஞர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டுள்ளார் அன்புமணி.
மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள், மதுக்கடை வைத்திருப்பவர்கள் உடன் கூட்டணி வைத்துள்ளார்கள். இதன் காரணமாக எனது அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்.