நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்ததாக, DRDO விஞ்ஞானியை, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் புனே காவல்துறை (ATS) கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) பொறியியல் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் பிரதீப் மோரேஸ்வர் குருல்கர். ஐஐடி கான்பூரில் படித்த பொறியியல் பட்டதாரியான குருல்கர், டிஆர்டிஓ-வில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
குறிப்பாக, செயற்கைக்கோள்களைத் தகர்த்தெறியும் ஏவுகணை தயாரிப்பு திட்டமான ‘மிஷன் சக்தி’ இவரது தலைமையில்தான் செயல்படுத்தப்பட்டது. டிஆர்டிஓ-வின் தேர்ந்த விஞ்ஞானியாக அறியப்படும் குருல்கர், தமது அரிய பணிகளுக்காக 2002இல் DRDO ‘Agni Award for Excellence’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ளதாக அறியப்படும் சிறந்த விஞ்ஞானியான பிரதீப் குருல்கர், பாகிஸ்தான் உளவாளிகளின் மோக வலையில் சிக்கி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத் துறைக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் புனேவின் கலாசௌக் காவல் நிலையத்தில் மே 3 ஆம் தேதி குருல்கர் மீது வழக்குப் பதிந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பயங்கரவாத தடுப்புப் படையின் உயரதிகாரிகள் கூறுகையில், “இந்தியாவின் எதிரி நாட்டைச் சேர்ந்த சிலருடன் பிரதீப் குருல்கர் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக டிஆர்டிஓ நிர்வாகத்திற்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலையடுத்து, குருல்கரின் லேப்டாப், கணினி மற்றும் மொபைல்ஃபோனை கைப்பற்றிய டிஆர்டிஓ நிர்வாகம், அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியது. அதன் பின்னர் இந்த விவகாரம், டிஆர்டிஓ-வின் கீழ் உள்ள நிலைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தக் குழு மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கை பெறப்பட்ட பின், குருல்கரின் லேப்டாப், மொபைல்ஃபோன் உள்ளிட்டவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு டிஜிபி நிலையிலான உயரதிகாரியின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.
பிரதீப் குருல்கர் டிஆர்டிஓ இயக்குநராகப் பதவி வகித்தபோது, பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்தவர்களுடன் (PIO) ரகசிய தொடர்பில் இருந்ததாக DRDO நிலைக்குழுவின் விசாரணை மற்றும் தடயவியல் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் ரகசிய தொடர்பில் இருந்தபோது, அவர் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் மற்றும் இதர முக்கிய விஷயங்களை வாட்ஸ் ஆப் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் என அனைத்து முறைகளிலும் பாகிஸ்தான் உளவுத் துறையினருடன் பகிர்ந்துள்ளதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து DRDO நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் குருல்கர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்” ” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட குருல்கர் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு மே 4 ஆம் தேதி புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை செவ்வாய்க்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஏடிஎஸ் அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
பாகிஸ்தான் உளவுத் துறையினர் விரித்த மோக வலையில் (ஹனிட்ராப்) குருல்கர் சிக்கி அதன்மூலம் தகவல்களை தெரிவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறை விரித்த மோக வலையில் அவர் சிக்கினாரா? என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.
விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில, இன்று (09.05.2023) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் மேலும் விசாரித்து தகவல்களை பெறவேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்கும்படி ஏடிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, மே 15 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.