மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அணை பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி. இந்த நதியில் இப்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது