நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
தலைமை நீதிபதி பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருந்த புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இது குறித்து பூஷன் ட்விட்டரில், நீதிபதி ஹெல்மெட் அணியாதிருந்தது குறித்தும் முககவசம் அணியாதிருந்தது குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தார். மேலும் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் தனது கருத்தினை பூஷன் டிவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் ட்விட்டரில் விமர்சித்திருந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு குறித்து விசாரணையில் நீதிபதி மீதான விமர்சனம் நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது என பூஷன் தனது தரப்பு வாதத்தினை முன்வைத்திருந்தார்.
மேலும், ஒரு தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் அல்லது தலைமை நீதிபதிகள் அடுத்தடுத்து வருவதை நேர்மையாக விமர்சிப்பது நீதிமன்றத்தை அவதூறு செய்வதாக கருத முடியாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை விமர்சிப்பதாக கருத முடியாது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் விமர்சிப்பதற்கான இணக்கமான உரிமை ஆகியவை நீதித்துறையின் பலமாகும். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைக்கவோ செய்யாது எனவும் பூஷன் விளக்கமளித்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் ஆகஸ்ட் 14ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் தண்டனை விவரம் ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க: ட்விட்டர் கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்க முடியாது- பிரசாந்த் பூஷன்