நாடு முழுவதும் கடந்த 12 ஆம் தேதி நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் வெளியாகி முறைகேடு நடந்திருப்பதால், அந்தத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 3,862 மையங்களில், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
நீட் தேர்வு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதால் அதனை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையிலும், மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து நீட் தேர்வை நடைமுறைபடுத்தி வருகிறது ஒன்றிய அரசு.
மேலும் நீட் தேர்வில் முறைகேடுகள், ஆள் மாறாட்டம், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுதல், கேள்வித்தாள் முறைகேடு என பல குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சமீபத்தில் நடத்தப்பட்ட நீட் இளநிலைத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்றும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளதால், அந்தத் தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வின் போது, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி மோசடி, பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் லீக் ஆனது என பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகையால் முறைகேட்டுடன் நடத்தப்பட்ட இந்தாண்டு நீட் தேர்வை ரத்து செய்து புதிய தேர்வை நடத்த வேண்டும். அந்த மனுவை விசாரித்து தீர்வு காணும்வரை, நீட் தேர்வுக்கான முடிவுகளை வெளியிடக் கூடாது.
மேலும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம், தேசிய தேர்வு அமைப்பு, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை தேர்வு நடத்துவதற்கான நிலையான வழிகாட்டி முறைகளை பயோ மெட்ரிக் முறையில் மேம்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு மாணவர்களுக்கு நன்மையா தீமையா.. தமிழ்நாட்டை பின்பற்றும் மகாராஷ்டிரா அரசு