நிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், வருகின்ற 25 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 550 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேலும் காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வரும் 25 ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், காரைக்கால் ஆகிய 5 மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 25 ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, கரூர், ராணிப்பேட்டையில் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, “நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக உள்ளது. தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன. வருகின்ற 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது மக்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும். புயல் ஓய்ந்த பிறகே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.
தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகளவு மழை பெய்யக் கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அதை சீரமைக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 23 முதல் கனமழைக்கு வாய்ப்பு