சென்னை தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 3 மாடிகள் உடன், ரூ.30 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படுகிறது.
இதில் நடிகர் சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் உள்ளிட்டவை அமைய உள்ளன. இதன் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வரும் ஜூலை மாதம் முழுவதுமாக முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல கல்வியாளர் ஐசரி கணேஷ் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இவரது தந்தை ஐசரி வேலன் பெயரில் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தில் ரூ.2 கோடி மதிப்பில் மினி திருமண மண்டபம் அமைய உள்ளது.
இதற்கான முழு செலவையும் நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஐசரி கணேஷ் ஏற்றுள்ளார். இதுகுறித்து நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“அதில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலருமான ஐசரி கணேஷ், நடிகர் சங்கத்தின் 62-ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான ஐசரி வேலன் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அதற்கான கட்டுமான செலவுத்தொகை அனைத்தையும் அவரே ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.
அதனடிப்படையில் முதற்கட்டமாக ரூ.1 கோடியை நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ஐசரி கணேஷ் வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.