எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
வரும் 23ம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், பாண்டவர் அணி சார்பில் நாசர், விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர் அதே பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், விஷாலின் பாண்டவர் அணிக்கு எதிராக சுவாமி சங்கரதாஸ் அணியில் கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்து நடிகர் சங்கத் தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அணி சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் பொது செயலாளர் பதவிக்கும், துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மனு தாக்கல் செய்ததிலிருந்து நடிகர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என்று நடிகர்களின் ஆதரவை இரு அணியினரும் கோரி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் அன்று காலை 10.30 மணிக்கு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் எஸ் வி சேகர் அல்வா என்ற நாடகம் நடத்துவதற்கு ரூ.10 ஆயிரம் செலவில் அனுமதி பெற்றுள்ளார். இதனால் எப்படி நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் நடத்துவதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விஷால் கொடுத்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடந்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், மாற்று இடத்தை தேர்வு செய்ய நடிகர் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி என்று இது போன்று ஒரு மாற்று இடத்தை தேர்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, நடிகர் சங்கத் தேர்தலை விட பொதுமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.