டெல்லியில் போராட்டம் நடைபெறும் சிங்கு, திக்ரி, ஹாசிபூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 25 நாட்களாக கடும் குளிரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதில் டெல்லியில் சிங்கு, திக்ரி, ஹாசிபூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் பதினோரு விவசாயிகள் வீதம் ஒவ்வொரு இடங்களிலும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
நாளை மறுநாள் உழவர் தினமாக கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளனர். அன்று அனைத்து விவசாயிகளும் மதிய உணவை தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.
டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் ஹரியானா மாநிலம் முழுவதும் சுங்கச்சாவடிகளின் முன்பாக மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.
27 ஆம் தேதி மோடி நடத்தும் இந்த ஆண்டின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் விவசாயிகள் மணி அடித்து தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளதாக விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 26ஆம் தேதி வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரங்கள் முன்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தேதியை விவசாயிகளே முடிவுசெய்து தெரிவிக்கும்படி விவசாயத்துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் 40 சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மத்திய அரசு எழுதிய கடிதத்தை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.
மேலும் விவசாயிகளை எதிர்கட்சிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என மோடி குற்றம் சாட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு பிரதமர் மோடி மற்றும் வேளாண் அமைச்சர் தோமர் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், “டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். விவசாயிகள் மீதான அரசின் பார்வை தவறானது. மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளால் வடிவமைக்கப்படுவதாக அரசாங்கம் கருதுவதும் தவறானது.
அரசியல் கட்சிகள் போராட்டத்தை தூண்டிவிடுவதாக பிரதமர் கூறுவது தவறு. போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்கள், அமைப்புகளின் எந்த ஒரு கோரிக்கையும் அரசியல் கட்சியுடன் இணைக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட ‘வேதிக் பெயின்ட்’- மத்திய அமைச்சர் அறிவிப்பு