இந்தியாவில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு எச்சரித்து மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலும் அதிகரித்து வரும் நிலையில், பிறழ்வு வைரஸான ஒமைக்ரான் தொற்று பரவலும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் தென்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 2 ஆம்தேதி இந்தியாவில் பரவியது.
இன்று (1.1.2022) இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஒமைக்ரான் பரவலில் இருந்து 488 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 943 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஸ்டிரா மாநிலத்தில் 454 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2வது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது. டெல்லியில் 351 பேரும், தமிழ்நாட்டில் 118 பேருக்கும், குஜராத் -115, கேரளா -109, ராஜஸ்தான் -69 பதிவாகி உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது.
தற்போது, தமிழ்நாடு உள்பட 23 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் சூழலில், அதனை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், கோவிட் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். தற்காலிக சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும். வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.
மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதார வசதிகளிலும் தேவையான மருத்துவப் பொருட்கள், ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருந்துகள் போதுமான அளவு கிடைப்பதை மாநிலங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.