தயாரிப்பாளர் சங்கத்தில் சிறப்பு அதிகாரிக்கு உதவியாக செயல்பட எஸ்.வி.சேகர் உட்பட 9 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை கோரி விஷால் சார்பாக தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் விஷால் தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரியாக என்.சேகர் என்பவரை நியமனம் செய்தது. இந்த நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தனி அதிகாரி தனக்கு உதவியாக செயல்பட பாரதிராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட தற்காலிக குழுவை நியமனம் செய்தார். இந்த குழுவின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கதிரேசன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஒன்பது பேர் கொண்ட குழுவின் நியமனத்திற்கு தடை விதிக்குமாறு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழுவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். தமிழக அரசு தரப்பில் இருந்து தரப்பட்ட இந்த குழு ஆலோசனை வழங்க மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று இந்த வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த ‘அயோக்யா’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் அயோக்யா.
பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அவலங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, பெண்களை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆண்களுக்கு உடனடியாக தண்டனை விதிக்கப்படுமா., இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா., இல்லை புதிய சட்டம் இயற்றப்படுமா.. என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஷாலுடன் இணைந்து கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சனா கான், யோகி பாபு, ராகுல் தாத்தா ஆகியோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் இப்படம் இன்று வெளியாகயிருந்தது நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், படம் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படவில்லை.