தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆறாவது நாளாக ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உட்பட 1,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 28,694 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் 861 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 15,762 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 12 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
மேலும் வாசிக்க: தீர்வில்லாத கொரோனாவுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் தமிழக அரசு
இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 1,116 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,826 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 3,000த்தை தாண்டியுள்ளது. தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 2,000, அடையாறு, அண்ணாநகர், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1,000த்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு, கொரோனா பரவல் தொடர்பாக தமிழக அரசிடம் அளித்துள்ள ஆய்வறிக்கையில், ” சென்னையில் கொரோனா பாதிப்பு நிலை இப்படியே தொடர்ந்தால், தமிழகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 1.5 லட்சமாக இருக்கும்.
அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் கொரோனா பரவல் இங்கு புதிய உச்சத்தை தொடும்” என்று எச்சரித்துள்ளது. இருப்பினும், இறப்பு விகிதம் 1 – 1.5 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் தடுப்பு பணிகள் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.