தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ந்தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தமிழக லாரி உரிமையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகள் உள்பட நாடு முழுவதும் 565 சுங்கச் சாவடிகள் உள்ளன. குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம் பர் 1ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சுங்கக் கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, லாரிகள் ஓடாததால் லாரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால், தங்களுக்கு நிவாரணம் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் 6 மாதம், சுங்கவரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், வருடாந்திர கட்டணத்தை ஒரு கட்டணமாக செலுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால், மத்திய அரசு எங்களது கோரிக்கையை கண்டுகொள்ளாமல், மத்திய நெடுஞ்சாலைத்துறை, சுங்கக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ள 20 சுங்கச்சாவடிகள்: புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுபட்டி (சேலம்), கொடைரோடு(திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம் (குமாரபாளையம்),
திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி) உள்பட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மேலும் வாசிக்க: செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு- தமிழக அரசு