மெரினா கடற்கரையைப் பராமரிக்க ஒதுக்கும் நிதி மற்றும் அங்கு மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதி விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது. மேலும் மெரினாவைச் சுத்தப்படுத்த திட்டம் வகுக்கவும் அறிவுறுத்தியிருந்தது,
 
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 17) மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, மாநகராட்சி ஆணையர் மீண்டும் ஆஜரானார்.
 
மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்தப் பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரையைச் சுத்தப்படுத்த காலை 6 மணி, பிற்பகல் 2 மணி, இரவு 10 மணி என மூன்று ஷிப்டுகளில் 250 பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
மெரினாவில் கடை அமைக்க 1,544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் கடைகளைப் பொறுத்தவரை மீன் சந்தை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இதையடுத்து, மெரினாவைச் சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்குத் தினமும் அங்கு காவல் துறை ஆணையருடன் நடைபயிற்சி மேற்கொள்ளும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
 
மேலும் மெரினாவைப் பராமரிக்க ஒதுக்கப்படும் நிதி, மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர் நீதிபதிகள்.