கொரோனா நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சமுக இடைவெளியை, ‘பீப்’ ஒலியுடன் அடையாளம் காட்டும் தொப்பியை கண்டுபிடித்துள்ளார் இந்திய வம்சாவளி சிறுமி நேகா.
உலகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,42,094 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
உலக நாடுகள் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியுடன், பொதுஇடங்களில் ஒருவருக் கொருவர் குறைந்தது 6 அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி நேகா ஷுக்லா, அறிவியல் தொழில்நுட்ப யுக்தியில் புதிய தொப்பி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
குறைந்தது 6 அடி சமூக விலகலை கடைபிடிக்காமல், இந்த தொப்பியை அணிந்திருப்பவரிர் அருகில் வந்தால், தொப்பியில் இருந்து பீப் பீப் ஒலியையும், அதிர்வையும் ஏற்படுத்தி, தொப்பி அணிந்திருக்கும் நபரை எச்சரிக்கும். இதனால், மற்றவர்களிடம் இருந்து விலகி சென்று விடலாம்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தனி ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கும் நேகாவின் கண்டுபிடிப்பு, அமெரிக்காவில் நடை பெற்ற இளம் விஞ்ஞானிகள், திறமைசாலிகள் அறிமுகம் என்னும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து கூறிய நேகா கூறுகையில், இந்த ‘சிக்ஸ் ஃபீட் அபார்ட் அலாரம் கேப்’ தொப்பியின் உள்ளே அல்ட்ரா சோனிக் சென்சார், மைக்ரோப்ராசசர், பஸ்சர், 9 வோல்ட் பேட்டரி ஆகியவை உள்ளன.
பொது இடங்களில் நமக்கும், அருகில் இருப்பவர்களுக்கும் இடையில் 6 அடி தூரம் இருப்பதை உறுதிசெய்ய, இந்தத் தொப்பி லேசான அதிர்வை உண்டாக்கி, பீப்… பீப்… பீப்… என்னும் ஒலியை எழுப்பி எச்சரிக்கும் என்றார். இது பார்வையாளர்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க: ஸ்பானிஷ் ப்ளூ போன்று அல்லாமல் கொரோனா வைரஸ் 2 ஆண்டுக்குள் முடிவுக்கு வரும்- உலக சுகாதார அமைப்பு