நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
 
காடுவெட்டி ஜெ.குருவின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த அவரின் தாய் கல்யாணி அம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் “காடுவெட்டியில் குருவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்குமுன், எங்களுக்குள்ள ஒன்றரைக் கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டு மணிமண்டபம் கட்டச் சொன்னதால, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அடியாட்கள் மூலம் எங்கள் குடும்பத்தினரை தாக்கி மிரட்டுகின்றனர் என்றவர் இதனால் பா.ம.க-வுடனான தொடர்பு என் மகனுடன் முடிந்துவிட்டது என்ற அதிர்ச்சி தகவலை வெளிட்டார்
 
 
“இனிமேல் எங்களுக்கும் பா.ம.க-வுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், எங்களுக்கு உதவி செய்பவர்களை மிரட்டி, பா.ம.க. கட்சியிலிருந்து நீக்குகிறார்கள். மேலும், காடுவெட்டி குருவின் பெயரை பா.ம.க-வினர் பயன்படுத்தக்கூடாது” என்று கூறினார்.
 
இதையடுத்து, பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்ட வழுவூர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் காடுவெட்டி ஜெ.குருவின் மகன் கனலரசன் உள்ளிட்டோர் மயிலாடுதுறையில் காடுவெட்டி ஜெ.குரு வின் படத்தைத் திறந்து வைத்தனர்.
 
பின் ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய, குருவின் மகன் கனலரசன் “எங்கள் குடும்பத்தை அழிக்க நினைக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை எதிர்த்து நிற்போம். என் படிப்பு முடியும் வரை நான் எதிலும் இறங்க மாட்டேன், அதுவரை என் மாமா வழுவூர் வி.ஜி.கே. மணி அனைத்தையும் பார்த்துக்கொள்வார்” என்று கூறினார்.
 
தைத் தொடர்ந்து பேசிய வழுவூர் வி.ஜி.கே.மணிகண்டன் “காடுவெட்டியில் குரு குடும்பத்தினருக்கு பிரச்னை என்றவுடன் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன்.
 
உடனடியாக , மருத்துவர் ஐயா என்னை அழைத்து,’ நல்ல எதிர்காலம் அமைத்து தருகிறேன், காடுவெட்டி பக்கம் போக வேண்டாம்’ என்றார்.
 
சரியான மருத்துவ சிகிச்சை வழங்காமல் காடுவெட்டி ஜெ.குருவின் மரணத்துக்கு காரணமாக இருந்தது பா.ம.க. குரு குடும்பத்துக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்பதால் கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள்.
 
காடுவெட்டி குருவின் கார், டிராக்டர் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டுப் பத்திரம் உட்பட கையகப்படுத்தி குருவின் குடும்பத்தை அழிக்க இருக்கும் பா.ம.க. வை எதிர்த்து, வருகிற பிப்ரவரி 1-ம் தேதி காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளன்று, புதிய அமைப்பைத் தொடங்கி பா.ம.க-வுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என்றார்.