பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் (PAL) ஆகியவை இணைந்து இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தின் (NPCI) துணையுடன் 2 வகையான ரூபே கடன் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிஎன்பி ரூபே பிளாட்டினம், பிஎன்பி ரூபே செலக்ட் என்ற இரு வகைகளில் கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பதஞ்சலி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், லாயல்டி புள்ளிகள், காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பதஞ்சலி ஸ்டோர்களில் ரூ.2,500-க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு ரூ.50 உச்சவரம்புடன் 2% கேஷ்பேக் கிடைக்கும். இரு வகை கடன் அட்டைகளையும் வாங்கும்போதே 300 ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படும்.
மேலும் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் இதைப் பயன்படுத்தலாம். பிஎன்பி ஜீனி செயலி மூலம் கடன் அட்டையை நிர்வகிக்க முடியும். பயன்பாட்டுக்கு ஏற்ப ரிவார்டு புள்ளிகள், சுலபத் தவணை வசதி, தானாகப் பணம் செலுத்தும் வசதி ஆகியவையும் கூடுதல் வசதியாகக் கிடைக்கும்.
விபத்தில் இறப்பு மற்றும் தனிப்பட்ட முழு ஊனம் ஏற்பட்டால் பிளாட்டினம் அட்டைதாரர்களுக்கு ரூ.2 லட்சம், செலக்ட் அட்டைதாரர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். மேலும் பிளாட்டினம் அட்டையை இலவசமாகப் பெறலாம். ஆண்டு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும்.
செலக்ட் அட்டை பெற ரூ.500 கட்டணம், ஆண்டு கட்டணம் ரூ.750. முந்தைய ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் ஒருமுறையாவது அட்டையைப் பயன்படுத்தினால், ஆண்டு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா கூறுகையில், “இந்தக் கூட்டாண்மையின் ஒருங்கிணைப்பு, குறிப்பாக ஆழமான அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 சந்தைகளில் உள்ள பயனர்களிடையே டிஜிட்டல் பேமெண்ட்டுகளை விரைவுபடுத்த உதவும். 20-50 நாட்களுக்கு பதஞ்சலி தயாரிப்புகளை வட்டியில்லா கொள்முதல் செய்வது இதன் அம்சமாகும்” என்று கூறியுள்ளார்.
யோகா குரு ராம்தேவ் கூறுகையில், “எப்போதும் மாறிவரும் வாழ்க்கை முறையால், ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற நேரத்தில், பிஎன்பி மற்றும் ரூபே உடனான இந்த கூட்டணி புதிய பயனர்களிடையே கிரெடிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்க சரியான வாய்ப்பை வழங்கும். இந்த முயற்சி பதஞ்சலி தயாரிப்புகளை வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அதுல் குமார் கோயல் கூறுகையில், “ரூபே தளத்தில் பிஎன்பி, பதஞ்சலி கோப்ராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஒத்துழைப்பு வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உகந்த பலன்களை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தின் சிஒஒ, பிரவீணா ராய் கூறும்போது, “பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் ஆகியவற்றுடன் இணைந்து முத்திரையிடப்பட்ட ரூபே காண்டாக்ட்லெஸ் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கார்டுகள் மில்லியன் கணக்கான பிஎன்பிக்கு தனித்துவமான மற்றும் மறக்கமுடியாத ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மற்றும் பதஞ்சலி வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. நவீன, சமகால, இளமை மற்றும் வித்தியாசமான பிராண்டாக இருப்பதால், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற கட்டணத் தீர்வுகளுக்கான புதுமையான சலுகைகளை உருவாக்க ரூபே முயற்சிக்கிறது. ரூபே மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் கட்டணங்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.