இலங்கையில் திடீர் திருப்பமாக அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து அதிரடியாக விலகிய ராஜபக்சே, இலங்கை மக்கள் கட்சியில் இணைந்தார்.
இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் மகிந்தா ராஜபக்சே. இவர், இலங்கை சுதந்திர கட்சியில் இருந்தார். இந்த கட்சியை கடந்த 1951ம் ஆண்டு தொடங்கியவர்களில் ராஜபக்சேவின் தந்தை டான் ஆல்வின் ராஜபக்சேவும் ஒருவர்.
கடந்த 2015ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் இவரது கட்சியைச் சேர்ந்த சிறிசேனா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இதனால், ராஜபக்சேவின் ஆதரவாளர்கள், ‘இலங்கை மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை கடந்தாண்டு தொடங்கினர்.
உள்ளாட்சி தேர்தலில் இந்த கட்சி மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. சமீபத்தில், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமர் பதவியில் அதிபர் சிறிசேனா நியமித்தார்.
ஆனால், ராஜபக்சேவால் பெரும்பான்மையை திரட்ட முடியாமல் போனதால், இலங்கை நாடாளுமன்றத்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறிசேனா திடீரென கலைத்தார். மேலும், ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் பதவி கைவிட்டு போனதால் விரக்தி அடைந்த ராஜபக்சே, இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து நேற்று திடீரென விலகிஇலங்கை மக்கள் கட்சியில் இணைந்தார்.
பொதுத்தேர்தலை இந்த கட்சி சார்பில் சந்திக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம், இலங்கை சுதந்திர கட்சியுடன் அவருக்கு இருந்த 50 ஆண்டு கால தொடர்பு முடிவுக்கு வருகிறது.
ராஜபக்சேவின் இந்த முடிவு, அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையி ல்இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா நேற்று அளித்த பேட்டியில், ‘‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை பதவி நீக்கியது, நாடாளுமன்றத்தை கலைத்தது போன்றவை உச்சபட்ச சர்வாதிகாரம். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள், அதிகாரத்தை அதிபர் பறித்து விட்டார். அரசு ஊழியர்கள் இனி சட்ட விரோதமாக யார் எந்த உத்தரவிட்டாலும் அதை நிறைவேற்றக் கூடாது’’ என கேட்டு கொண்டார்