இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் தன்னுடைய உலகக் கோப்பை இறுதி ஜெர்சியை ஏலம் விட்டு, கரோனா வைரஸை எதிர்த்துப் போராட 60 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2019ல் நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்து தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் தோல்வியுற்றது. தற்போது உலக அளவில் அளவில் கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் அனைவரும் அதிகளவில் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர்.
இதனிடையே இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், 2019 உலக கோப்பை இறுதிப்போட்டியில் உபயோகித்த தன்னுடைய ஜெர்சியை ஏலத்தில் விட்டு, அதன் தொகையை கரோனா பாதிப்பிற்கு நிவாரணமாக அளித்துள்ளார். இந்த போட்டியின்போது இந்த ஜெர்சியை அணிந்து விளையாடிய பட்லர், எதிரணி வீரர் மார்ட்டின் குப்டில்லின் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் அரைசதத்தை குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
அந்த ஜெர்சியில் அணியின் வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த வாரத்தில் ஜெர்சியை தான் ஏலம் விடப்போவதாக அறிவிப்பை பட்லர் வெளியிட்டார். அந்த ஜெர்சியை வாங்க 82 பேர் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது 65,000 பவுண்டுகளுக்கு மேல் (80,000 அமெரிக்க டாலர்) ஏலமெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் தோராயமாக 60 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து குறிப்பிட்ட பட்லர், “இது மிகவும் சிறப்பு வாய்ந்த சட்டை, ஆனால் அது அவசரக்கால காரணத்திற்குப் பயன்படக்கூடியதாக இருப்பதால் கூடுதல் அர்த்தத்தைப் பெறுகிறது என நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பட்லரின் இச்செயலை கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிவருகின்றனர்.