நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவழக்குகளை தனியாக விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பாஜவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அரசு துறைகளில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் கிரிமினல், ஊழல், லஞ்சம் வழக்கில் தண்டிக்கப்படும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் மீண்டும் ேதர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என்று சட்ட விதிகள் உள்ளது. இந்த முரண்பாட்டை நீக்கி, தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் உறுதி அளித்தது.
மேலும் கடந்த 2014ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் எம்பி, எம்.எல்.ஏகள் மீது 1,581 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ஆந்திரா, தெலங்கானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி (2 நீதிமன்றங்கள்), கேரளா, மத்தியபிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய 11 மாநிலங்களில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இந்த நீதிமன்றங்கள் செயல்படாமல் இருந்தது.
இதன் தொடர்ச்சியாக இப்போது சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகையில், எம்.எல்.ஏ, எம்.பி.,கள் மீதான குற்றவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் நேற்று காலையில் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அப்போது, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் கூறுகையில்,’ இந்த நீதிமன்றம் சட்டத்தை நிலை நாட்டி ஜனநாயக மற்றும் சட்டத்தின்படி செயல்படும். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும் சரிசெய்யப்படும் என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதரன், ஜெகதீஸ் சந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக ஜெ.சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நீதிமன்றத்திற்கு 17 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ரூ.97 லட்சம் அரசால் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் 265க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நளினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trackbacks/Pingbacks