சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ரூ.16.40 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
 
இதுதொடர்பாக, அமலாக்கத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ” மும்பை மற்றும் புணே ஆகிய நகரங்களில் ஜாகீர் நாயக்கின் குடும்பத்தினரின் பெயர்களில் உள்ள சொத்துகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.
 
அதன்படி, மும்பையில் உள்ள ஃபாத்திமா ஹைட்ஸ், ஆஃபியா ஹைட்ஸ் ஆகிய கட்டடங்கள், மும்பை பாந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடம், புணேவில் என்கிரேஸியா என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஆகிய சொத்துகள் முடக்கப்படுகின்றன. 
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16.40 கோடியாகும். இந்தச் சொத்துகள், ஜாகீர் நாயக்கின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளன.
 
அதற்கான நிதி, ஜாகீர் நாயக்கின் வங்கிக் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜாகீர் நாயக்குக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
 
இதுவரை முடக்கப்பட்டுள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.50.49 கோடியாகும். வழக்கில் குற்றம்சாட்டப்படும் ஒருவர், சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகளில் இருந்து பலனடைவதைத் தடுப்பதற்காகவே, அவர்களின் சொத்துகள் முடக்கப்படுகின்றன. “
 
மேலும் ஜாகீர் நாயக் மீதான வழக்கில், அவருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவனரான ஜாகீர் நாயக், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் இருந்து வெளியேறினார். அவர் மீது பயங்கரவாதத்தை தூண்டியது, கருப்புப் பண மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. 
 
அவர் மீதான குற்றச்சாட்டுகளை தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மும்பை நீதிமன்றத்தில் ஜாகீர் நாயக் உள்ளிட்டோருக்கு எதிராக தேசியப் புலனாய்வு அமைப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் “ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா, சுஃபி முஸ்லிம்கள் ஆகியோரின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக வேண்டுமென்றே, தீய நோக்கத்துடன் ஜாகீர் நாயக் பேசினார். அவரது பேச்சுகளை அதிகம் வெளியிட்டதில் இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ஐஆர்எஃப்), ஹார்மோனி மீடியா ஆகியவற்றுக்கு பெரும் பங்கு உள்ளது.
 
இதற்காக, இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து அவர் பணம் பெற்றுள்ளார் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது”.
 
தற்போது மலேசியாவில் தங்கியுள்ள ஜாகீர் நாயக், பாஜக ஆட்சியில் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால்  வழக்கு விசாரணையைத் தவிர்க்கும் நோக்கில் இந்தியா வர மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது