இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபட்சேவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது.இதையடுத்து, ராஜபட்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
 
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறீசேனா பிறப்பித்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற அவை கூடியது.
 
இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் ரனில் விக்ரமசிங்க கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர்.
 
அப்போது, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் ராஜபட்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
 
நாடாளுமன்ற அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஏற்றுக் கொண்டார். சிறீசேனாவால் நியமிக்கப்பட்ட ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது அனைத்து எம்பிக்களும் வாக்களித்தனர். இதன் மூலம் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
 
தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த ராஜபட்ச உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் சபாநாயகர். நாளை காலை மீண்டும் அவை கூடும் என்று அறிவித்தார்.