இயக்குனர் ஏ.எல். விஜய் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யாவை வரும் ஜூலை 11ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் விவாகரத்து பெற்ற முதல் மனைவியும், நடிகையுமான அமலா பால் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பிப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஏ.எல். விஜய். இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகன். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ’கீரிடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால்பதித்தார்.
அதை தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், சைவம், தலைவா போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை பதிவு செய்தார். தெய்வதிருமகள் படத்தின் போது அமலா பாலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில், ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தலைவா படம் வெளியான சில மாதங்களில் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அமலா பால் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2017ம் ஆண்டில் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தை இந்தி மற்றும் தமிழில் இயக்குவதற்கு ஏ.எல். விஜய் ஆயத்தமாகி வருகிறார்.
தற்போது திருமண அறிவிப்பை விஜய் அறிவித்த அதே நேரத்தில் அமலா பாலும் தனது டுவிட்டரில், ”போராடுவேன், உயிர் வாழ்வேன், எந்த தடைகள் வந்தாலும் அவற்றில் இருந்து எழுந்து உயர்ந்து நிற்பேன். என்னுடைய வலிமையே சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியில் நான் வைத்திருக்கும் நம்பிக்கையே” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய், மருத்துவர் ஐஸ்வர்யா திருமணம் வரும் ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.