நடிகர் சூர்யா அகரம் ஃபவுன்டேஷன் மூலம் திறமையான பள்ளி மாணவர்கள் உயர்கல்வியை தொடர உதவி செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்! தகுதியான மாணவர்களை அகரத்திற்கு அடையாளம் காட்டுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம். அரசுப் பள்ளி மாணவர்கள் கல்லூரிகளில் உயர்கல்வி பெற அகரம் ஃபவுன்டேஷன் கடந்த பத்தாண்டுகளாக துணை புரிகிறது. பெற்றோர்களை இழந்த, ஆதரவற்ற, வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது.
இதுவரை சுமார் 2500 மாணவர்கள் அகரம் விதைத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
2019ம் ஆண்டு ப்ளஸ்டூ தேர்வு எழுதுகிற மாணவர்களில் தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை மாணவர்களை அகரத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
வறுமை மற்றும் குடும்பச்சூழல் காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் போகிற மாணவர்களை கீழ்க்காணும் அகரம் ஃபவுன்டேஷன் அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொள்ள செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். ப்ளஸ்டூ மாணவர்களின் வகுப்பறை கரும்பலகையில் இந்த தொடர்பு எண்களை எழுதிப் போடும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி. 8056134333 / 9841891000” என்று தெரிவித்துள்ளார்.