காங்கிரஸ், திமுக இணைந்து தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முடிவு எடுத்துள்ளோம்: சேலத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம்
சேலம்: காங்கிரஸ், திமுக இணைந்து தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முடிவு எடுத்துள்ளோம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணியை ஆதரித்து சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்..
 
கலைஞர் சாதாரண மனிதர் அல்ல; தமிழர்களின் குரலை ஓங்கி ஒளித்த தலைவர் அவர். அனைத்துக் கலாச்சார மக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுகின்றன.
 
இந்நிலையில், தமிழர்களை விட பிரதமர் அலுவலக அதிகாரிகள்தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை முடிவு செய்ய வேண்டும் என்று மோடி கருதுகிறார்.
 
ஆனால், மத்தியில் உள்ள அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. கோடிக்கணக்கான மக்களின் கருத்தை அறிந்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், மாநிலங்களை, மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.
 
நீட் தேர்வால் இளம் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தேவையாக என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.
 
தமிழ்நாட்டில் இன்னொரு அனிதா தற்கொலை செய்வதை காங்கிரஸ் விரும்பவில்லை. மக்களின் குரலை கேட்டு கருத்து பரிமாற்றங்கள் மூலம் தீர்வுகளை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது; ஆனால் பிரதமர் மோடி இதனை விரும்பவில்லை.
ரூ.500, ரூ.1000 செல்லாது என்று இரவில் திடீரென அறிவித்தார் பிரதமர் மோடி. பணமதிப்பிழப்பால் திருப்பூரில் தொழில்களும் காஞ்சிபுரத்தில் பட்டு நெசவும் அழிந்து போயின. யாரையும் ஆலோசிக்காமல் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தார்.
 
நாட்டில் 15 பெரிய பணக்காரர்களுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளை அழைத்து பேச மோடிக்கு மனமில்லை.
 
பணக்காரர்கள் தொழிலதிபர்களுடன் மோடி அமர்ந்து இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். விவசாயி, தொழிலாளியோடு மோடி அமர்ந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியாது. நெசவாளிகளுக்கும் வரி விதித்து அவர்களை மோடி கொடுமைப்பத்தினார்.
 
குறைந்தபட்சமான எளிமையான வரியை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விதிப்போம். காங்கிரஸ், திமுக இணைந்து தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்க முடிவு எடுத்துள்ளோம்.
 
காங்கிரசும் திமுகவும் இணைந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஏழைகளுக்கு வழங்கும். நாட்டில் 20% ஏழை மக்களை அடையாளம் கண்டு நிதியுதவி வழங்கப்படும்.
 
ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏழைகளுக்கு நிதியுதவி வழங்குவது எந்த நாட்டிலும் இல்லாத புரட்சிகரமான திட்டம்.
 
இந்தியாவிலும் தமிழ்நாட்டுலும் பொருட்கள் அனைத்தையும உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சொந்தமாக தொழில் தொடங்க நம் நாட்டில் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
 
3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெறாமல் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அனில் அம்பானிக்கு மோடி கொடுத்த பணத்தை எடுத்து இளைஞர்கள் தொழில் தொடங்க வழங்குவோம் என்று பேசிய ராகுல் காந்தி, நாம் அனைவரும் இணைந்து பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.