ராயபுரம் தொகுதியில் திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில், பல்வேறு இடங்களில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, ராயபுரம் தொகுதிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோயில் தெருவில், 49-வது வார்டு வாக்குச்சாவடி முகாமில், நரேஷ் என்பவர் அத்துமீறி புகுந்ததாகக் கூறி, விசாரணை எதுவும் இன்றி, அவரை பேசவிடாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் அவரது சட்டையை கழற்றி அவரை அடித்து இழுத்து வந்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேஸ்புக்கிலும் வெளிவந்தது. இதற்கு திமுக மற்றும் பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது. அதிமுகவினரால் தாக்கப்பட்ட நரேஷ், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதனையடுத்து நரேஷ் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், பயங்கரமான ஆயுதத்தால் தாக்குதல், பிறருக்கு தொல்லை கொடுத்தால், ஆபாசமாக நடந்து கொள்ளுதல், கலகம் தூண்டுதல், கொடுங்காயம் விளைவித்தல், அத்துமீறி வாக்குச்சாவடிக்கு நுழைதல் மற்றும் அரை நிர்வாணப்படுத்தி அடித்தல் உள்ளிட்ட 8 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது (இரவு 8 மணி அளவில்) சென்னை பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.