அடுத்த ஆண்டு முதல் குடிமக்கள் அனைவருக்கும் சிப் இயக்கப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது பாஸ்போர்ட் புத்தகம் வடிவில் வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டில் அனைவருக்கும் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சிப் பொருத்துவதன் மூலம், ஒருவரின் வெளிநாட்டு பயணத்தை எளிதாக சேமிக்க முடிவும் என்றும், போலிகளை துல்லியமாக களைய முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த இ-பாஸ்போர்ட் சர்வதேச விமான போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட உள்ளன.
இது சோதனை முயற்சியாக சுமார் 20000 அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் விநியோகிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இ-பாஸ்போர்ட் பணிக்காக தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்ய தேசிய தகவல் மையமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஆலோசனை நடத்தியுள்ளன.
முதல் கட்டமாக சென்னை மற்றும் டெல்லியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் பிரத்தியேக கிளை அலுவலகங்கள் அமைத்து அதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 10,000 முதல் 20,000 இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட உள்ளன.
வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள 36 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இ-பாஸ்போர்ட் வழங்கப்பட உள்ளன. இ-பாஸ்போர்ட் பெறுவதில் கால தாமதம் இருக்காது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க: ஸ்ரீதேவி மகள் நடித்த ‘குஞ்சன் சக்சேனா’ படத்திற்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு