சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் கடைகள் இயங்கி வருகிறது. சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் பகுதிகளில் கிளைகள் உள்ளன.

சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அருள் அண்ணாச்சி தான். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்து சுற்றி 15 பெண்களுடன் சேர்ந்து தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சிநேகா துவங்கி தற்போது இருக்கும் ஹன்சிகா, தமன்னா வரை அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார். தற்போது, அருள் அண்ணாச்சி நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் படத்தினை சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரங்களை இயக்கிய இரு இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாகயும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்தன. இதனையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினத்திற்கு சொந்தமான 12 இடங்களில் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல் நாள் சோதனையில் கடந்த 2 ஆண்டுகளில் கடைகளில் நடந்த வியாபாரம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 2வது நாளாக நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவை தொடர்ந்து விடிய விடிய நீடித்தது. இந்த சோதனையில் வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை 3வது நாளாக இன்றும் (3.12.2021) தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் உரிமையாளர்கள் மற்றும் கடைகளின் மேலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரவணா செல்வரத்தினம் நகைக்கடைக்கு கொள்முதல் செய்யப்பட்ட நகைகள் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சோதனை தொடர்ந்து நீடிப்பதால் பொதுமக்கள் கடைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடைகளில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.