ரயிலில் பயணம் செய்யும் போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும், செல்போனில் சத்தமாக பேசுவதற்கும் தடை விதித்து, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய ரயில்களில் பயணம் செய்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. குடும்பங்களுடன், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பயணங்களுக்கு எப்போதும் ரயில் பயணம் ஏதுவாக இருக்கும்.

இந்நிலையில் ரயில்களில் சக பயணிகளுக்கு பயணத்தை மிகவும் வசதியாகவும், இனிமையானதாகவும் மாற்ற, இந்திய ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது.

அதன்படி இந்திய ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக இசைப்பதையும், சத்தமாக தொலைபேசியில் பேசுவதையும் தடை செய்வதன் மூலம் ரயில் பயணிகளின் பயணத்தை இனிமையாக்க முடியும் என்று தெரிவிக்கிறது இந்திய ரயில்வே.

இதுகுறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில், “ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாகப் பேச மற்றும் செல்போனில் சத்தமா பாட்டுக் கேட்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி செயல்பட்டால் அபராதம் வசூலிக்கப்படும்.

மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். அதேபோல் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாகப் புகார் அளித்தால் உடனடியாக ரயில்வே காவல்துறை மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் பயணிகளிடம் ரயில்வே ஊழியர்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். முதியவர்கள், ஊனமுற்றோர், பெண் பயணிகளுக்கு ரயில்வே ஊழியர்கள் உதவியாக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.

சாதாரணமாக ரயில் பயணத்தில் பாட்டு கேட்பது, செல் போனில் பேசுவது இயல்பான ஒன்று.இது செய்யக்கூடாது என்று இந்திய ரயில்வே அறிவித்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.