மல்யுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கேட்ட இளைஞரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி மேடையிலேயே அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங் பங்கேற்றிருந்தார். இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

அப்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவர் போட்டியில் பங்கேற்க தனக்கும் வாய்ப்பளிக்குமாறு விளையாட்டு நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அந்த மல்யுத்த வீரருக்கு தகுதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அந்த இளைஞர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். இதனைக் கண்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மேடையில் வைத்தே அந்த இளைஞரை அடித்துள்ளார்.
இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து வீடியோ வைரலாகி சர்ச்சையான நிலையில், சக மல்யுத்த வீரர்களும், அரசியல் கட்சியினரும் பாஜக எம்பிக்கு எதிராக கண்டனக் குரல்களை கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, பாஜக எம்பியின் இந்த அநாகரிகமான செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.