மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பினருக்காக சிறப்பு வகுப்புகள் கூடாது என்றும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2019 ஏப்ரல் 9ம் தேதி மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறக் கூடாது என பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்ததுடன், மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ஆனால் 2018 – 2019ம் ஆண்டில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் போர்டு பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு நீட், ஐஐடி என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு கோடை காலத்தில் தான் வகுப்புகள் நடைபெறும். இந்த போட்டி தேர்வுகள் மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இந்திய அளவில் நடைபெறும். அதை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்தப்படவேண்டும்.

எனவே 2019 ஏப்ரல் 9ம் தேதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பினருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அதேவேளையில் நீட், ஐஐடி உள்ளிட்ட தகுதி தேர்வு, நுழைவுத் தேர்வுகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.