பிரதமர் மோடி சிவலிங்கம் மீது இருக்கும் தேள் மாதிரி, அதை கையால் அகற்றவும் முடியாது, செருப்பால் அடிக்கவும் முடியாது என்று பேசிய காங்கிரஸ் தலைவர் சசி தரூர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்வில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

“ஒரு ஆர்எஸ்எஸ் பிரமுகர் செய்தியாளரிடம் பேசுகையில் சிறந்த உதாரணம் ஒன்றை கூறினார். அதை நான் இங்கு பகிர்கிறேன். மோடி சிவலிங்கம் மேல் அமர்ந்திருக்கும் தேள் மாதிரி. அவரை கையால் அகற்றவும் முடியாது, அதை செருப்பால் அடிக்கவும் முடியாது என்றார். மோடியை கட்டுப்படுத்த முடியாத இயலாமையின் ஏமாற்றத்தை அவர்கள் இவ்வாறு வெளிப்படுத்தினர்” என்றார்.


இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தில்லி பாஜக துணை தலைவர் ராஜீவ் பாபர், சசி தரூரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த புகாரில் சசி தரூரின் கருத்து மக்கள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் இந்திய தண்டனையியல் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால், சசி தரூர் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற நேரிடும்.