பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் “உயர்ந்த மனிதன்”. இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப்பின் கெட்டப் குறித்த புதிய ஸ்டில்களை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, கழுத்தில் சிகப்புத்துண்டு நெற்றியில் விபூதி,குங்குமம் என ஆன்மீகப்பழம் போன்று அமிதாப் இந்த ஸ்டில்களில் தோன்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது குறித்து கூறிய எஸ்.ஜே.சூர்யா, என்னுடைய வாழ்நாளில் மிகவும் சந்தோஷமான நாள் இதுதான். எனது கனவு நனவான இந்த நேரத்தில் அம்மா, அப்பா, கடவுள் ஆகியோர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் உருவாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு உதவி செய்ததாகவும், இப்படத்தை அறிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உதவி செய்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்டுள்ளார். அமிதாப் நடிக்கும் முதல் தமிழ்ப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.